புதுடெல்லி: தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன என்றும், கர்நாடகாவில் 40,000 போலி வாக்காளர் முகவரிகள் உள்ளன என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
இந்தப் பின்னணியில், டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி இன்று நடத்தினார். அதில் அவர் கூறியது: “பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான ஃபார்ம் 6 (Form 6) ஆவணத்தை 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியள்ளார். இப்படி பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்துவிட முடியும்.
தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என்ற எனது நீண்ட கால சந்தேகத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியல் குறித்த தரவுகளை இயந்திரத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும். ஆனால், அத்தகைய தரவுகளை தேர்தல் ஆணையம் தருவதில்லை. இது, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை திருடுகிறது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.