சென்னை: “தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலமாக ராமாயணம் திகழ்கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திருவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் 60-வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகலமாக நடத்தி வருகின்றன. விழாவின் 6-ம் நாளான நேற்று அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில்‘ஆசிய கலாச்சாரங்களில் ராமாயணம்’ என்ற தலைப்பில் சிறப்பு கலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த அப்சரா நடனப் பள்ளி கலை இயக்குநரான இசை, நடனக் கலைஞர் அரவிந்த் குமாரசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ராமாயணம் ஒரு அழியா காவியம். அது தர்மம், விசுவாசம், தியாகம், நேர்மை ஆகிய பண்புகளை வலியுறுத்துகிறது. தீமையை நன்மை வெற்றி கொள்ளும், நேர்மை வெல்லும், அர்ப்பணிப்பு போன்றவை அதன் முக்கிய கருப்பொருள்கள் ஆகும். உலகில் மலைகள் இருக்கும் வரை, ஆறுகள் ஓடும் வரை ராமாயணம் மக்களிடையே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். ராமா யணத்தை எழுத்து, நாடகம், நடனம், இசை, சிற்பம் என பல்வேறு வடிவங்களில் காணலாம். உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தோனேசியா. அந்நாட்டு மக்கள் ராமாயணத்தை கொண்டாடுகிறார்கள். அதுதான் ராமாயணத்தின் ஆற்றல்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா,லாவோஸ், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ராமாயணம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. அந்நாடுகளில் நடனம், பொம்மலாட்டம், கோயில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் ராமாயண காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு, இந்தோனேசியாவின் பிராந்திய மொழியான ஜாவனிய மொழிப்பாடல்கள், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை வடிவங்களில் ராமாயணத்தை பார்க்கலாம். அதேபோல் கம்போடியா நாட்டின் பாரம்பரிய நடனங்களில் ராமாயணக் கதைகள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோயில் சிற்பங்களில் ராமாயண காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள பாண்டே ப்ரீ கோயில், புரோம்பானம் கோயில் சிற்பங்களிலும் ராமாயண கதை காட்சிகளைக் காணலாம். தாய்லாந்து நாட்டின் தேசிய புராணமாக இருப்பது ராமாயணம். அது ராமகியன் என்ற பெயரில் அங்கு அழைக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான கூட்டு கலாச்சார பரிமாற்றங்களில் ராமாயணம் தொடர்பான நடனங்களுக்கும் நாடகங்களுக்கும் முக்கிய இடம் உண்டு. ராமாயணம் என்பது ஒரு கதை என்பதைத் தாண்டி அது ஓர் உயிருள்ள பாரம்பரியம் ஆகும். அது நமது கலாச்சாரவேர்களையும், மதிப்பீடுகளையும் கொண்டாடுகிறது. நாடுகளைத் தாண்டிய கலாச்சார கதைகளின் ஆற்றலுக்கு உதாரணமாக திகழ்கிறது. அது தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலமாக விளங்குகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் குமாரசாமிக்கு ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் லட்சுமி ஸ்ரீநாத் நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக, ஃபோரம் ஆர்ட் கேலரி இயக்குநர் ஷாலினி பிஸ்வஜித் வரவேற்றார். நிறைவாக ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார் நன்றி கூறினார். அவர் பேசும் போது, “சிங்கா 60 விழாவில், ஓவியக்கண்காட்சி, கலை, கலாச்சாரம், நாடகம், உணவு, குழு விவாதம் என பலதரப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. சிங்கப்பூர்-இந்திய கலைஞர்களின் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி ஃபோரம் ஆர்ட் கேலரியில் ஆகஸ்ட் 30 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. சிங்கா60 நிகழ்ச்சி வாயிலாக சிங்கப்பூரை சென்னை நகருக்கு கொண்டுவந்துள்ளோம். இந்நிகழ்ச்சியை சென்னைவாசிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கட்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் துணை தூதர் வைஷ்ணவி வாசுதேவன் ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் விஜயா அருண் மற்றும் கல்வியாளர்கள், கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ,பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
‘சிங்கா 60’ திருவிழாவின் 7-வதுநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு கிண்டியில் உள்ள ஹோட்டல் ஐடிசி கிராண்ட் சோழாவில் ‘இண்டியா கனெக்ட் சிங்கப்பூர் எடிஷன்’ என்ற தலைப்பில்சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெறு கிறது. இதில், இந்தியா-சிங்கப்பூர் இடையிலான ராஜ்ஜிய, பொருளாதார, தொழில்நுட்ப உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் ஆசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மதுபானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 8-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஃபோரம் ஆர்ட் கேலரியில் சிங்கப்பூர் கலைஞர் குமாரி நாகப்பன் பங்கேற்கும் கலை சொற்பொழிவு நிகழ்ச்சிநடைபெறுகிறது. ‘கலைப் படைப்புகளின் உருவாக்கம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார்.