புதுடெல்லி: டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா, டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் கடந்த 4-ம் தேதி காலை 6.15 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்றனர். சாணக்யபுரியில் உள்ள போலந்து தூதரகம் அருகே சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், எம்.பி.சுதாவின் கழுத்தில் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் புகார் கடிதம் அனுப்பினார். நகை பறிப்பு தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த டெல்லி போலீஸார், குற்றவாளியை அடையாளம் கண்டனர். அவர் டெல்லி ஓக்லா ஹர்கேஷ் நகர் பகுதியை சேர்ந்த சோனு என்ற சோஹன் ராவத் என்பது தெரியவந்தது.
அவர் மோதிபாக் பகுதியில் நேற்று பைக்கில் வந்தபோது, அவரை டெல்லி வாகன திருட்டு தடுப்பு போலீஸார் (ஏஏடிஎஸ்) வழிமறித்து கைது செய்தனர். சுதா எம்.பி.யிடம் அவர் பறித்து சென்ற தங்க சங்கிலியும் மீட்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பைக், மற்றொரு திருட்டு வாகனம், 4 செல்போன்கள், உடைகள், செயின் பறிப்பின் போது அவர் பயன்படுத்திய ஹெல்மெட் ஆகியவற்றை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர் மீது டெல்லி காவல்நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஜுன் 26-ம் தேதி ஜாமீனில் வந்துள்ளார். தற்போது எம்.பி. சுதாவிடம் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.