நாகர்கோவில்: “மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றஞ் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகர்கோவிலுக்கு இன்று வந்த தமிழக சட்டபேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கும் கிடையாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது யார் என்பது உங்களுக்கு தெரியும். மாநில அரசுக்கு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு முழு உரிமை உள்ளது, பணியாளர் நியமிக்கவும் மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மறைந்த தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் இவ்வளவு நாள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பியுள்ளார். அதில் என்ன காரணம் கூறுகிறார்கள் என்றால் பணியாளர் நியமனம் ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இல்லை என்று கூறுகிறார்.
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும்போதுதான் அதில் குறை இருக்கிறது என்று கண்டுபிடித்தார்களா? என்பது தெரியவில்லை.
துணை வேந்தர் நியமனத்திற்கு மாநில அரசு மூன்று பேரை நியமனம் செய்கிறார்கள், அரசு தரப்பில் ஒருவர், சிண்டிகேட் மெம்பர் ஒருவர், கல்வியாளர் ஒருவர். இதில் யுஜிசி நான்காவதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், தமிழ்நாட்டில் அப்படி சட்டம் இல்லை, தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தின்படி அப்படி கிடையாது.
எந்த காரணமும், குறையும் கண்டுபிடிக்காத காரணத்தினால் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வருவதற்கு தனிப்பட வெறுப்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை. அவர் சமூக நீதிக்காக எல்லோருக்காகவும் வாழ்ந்து மறைந்தவர். சனாதன தர்மம் அதற்கு தடையாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
மசோதாவுக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மாநில அரசுதான் பல்கலைக்கழகம் ஆரம்பித்து ஆளுநர்தான் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் அனுமதி தந்துள்ளார். இந்த ஒரு பல்கலைக்கழகத்திற்குதான் ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதில் இருந்து திட்டமிட்டு என்ன நோக்கத்திற்கு செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சட்டப்படி யார் தவறு செய்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றத்தையும் மூடி மறைப்பதும் கிடையாது, துணை போவதும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போது, சமூகத்தில் என்று வரும்போது தனிப்பட்ட சிலரது விருப்பு வெறுப்பில் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் அரசால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 14-ம் தேதி அமைச்சரவை கூட இருக்கிறது. அப்போது, ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவருவது தொடர்பாக நல்ல முடிவு வரும்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்கின்றனர், அதனையும் தாண்டி முதல்வர் முழு முயற்சி செய்து எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் எல்லோருக்கும் பாடமாக இருப்பது தமிழ்நாடு என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர அதனை தாங்க முடியாமல் சிலர் வார்த்தைகள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” என்றார்.