தென்காசி: “திமுகவை விமர்சனம் செய்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் கோபம் வருகிறது? கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். காவல் துறைக்கே இப்படி ஒரு நிலை என்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?
போதை நபர்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெடுகிறது. எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அதை தடுக்க திராணியற்ற அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. திறமையில்லாத முதல்வரால் தமிழக காவல் துறை செயலிழந்து உள்ளது. அதிகார மையங்கள் காவல்துறையை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா ?
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. சிறுமி முதல் பாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது. விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் இங்கு அதிகமாக உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியது.
அதிமுக ஆட்சியில் ரவுடிகள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டது. இப்போது ரவுடிகள் தாராளமாக நடமாடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். குஜராத், மற்ற மாநிலங்களில் போதைப் பொருள் இல்லையா என்று செல்வப்பெருந்தகை பேசுகிறார். தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். நாடாளுமன்றத்தில் பேச திராணியற்றவர்களாக திமுக கூட்டணி எம்பிக்கள் உள்ளனர்.
அதிமுக குறித்து திட்டமிட்டு அவதூறாக பேசுகின்றனர். அதிமுக 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்தது. அதிமுக ஆட்சியில் மதச் சண்டை, சாதி சண்டை நடைபெற்றதா? அதிமுக ஆட்சிக் காலம் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. இதை சிறுபான்மை மக்கள் உணர வேண்டும். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து ஆட்சி பொறுப்பில் பங்கேற்றது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சியாக தெரிந்தது. எங்களோடு கூட்டணி வைத்தால் திட்டமிட்டு தவறாக பேசுகின்றனர். அதிமுக மதத்துக்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளோம். ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை மத்திய அரசு 2018ம் ஆண்டு நிறுத்தியது. அதிமுக அரசு தொடர்ந்து நிதியை வழங்கியது. 2021ம் ஆண்டு அதற்கான நிதியை உயர்த்தி வழங்கினோம். சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட நிதி ஒதுக்கினோம். ஹாஜிகளுக்கு 20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கினோம்.
உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தினோம். இப்படி ஏராளமான திட்டங்களை சிறுபான்மையினருக்காக வழங்கினோம். அப்துல் கலாம் குடியரசு தலைவராக வர வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களித்தது திமுக. இதேபோல் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம். சிறுபான்மை மக்களுக்கு அரணாக திகழ்வது அதிமுக. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது.
தாலிக்கு தங்கம் 6 லட்சம் பேருக்கு வழங்கினோம். மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் 52.35 லட்சம் பேருக்கு வழங்கினோம். அந்த திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டங்கள் தொடரும். கல்விக்கு அதிக நிதியை வழங்கினோம். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி கொண்டுவந்தோம். தமிழகத்தில் 4 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா? திறமையில்லாத முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்.
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. அரசு பள்ளியில் படிக்கம் மாணவர்கள் மருத்தவ கல்லூரியில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தோம். இத்திட்டத்தில் 2,818 பேர் மருத்துவ கல்வியில் படிக்கின்றனர். மக்கள் ஏற்றம் பெற திட்டங்களை செயல்படுத்தினோம். தமிழகம் முழுவதும் தென்காசி உட்பட 6 மாவட்டங்களை புதிதாக உருவாக்கினேன். திமுக ஆட்சியில் ஒரு மாவட்டமாவது உருவாக்கப்பட்டதா? திறமைற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சொத்து வரி 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மக்கள் மீது வரியை சுமத்தி வாட்டி வதைக்கும் இந்த அரசு தேவையா? அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டு மனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனையுடன் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். கடையநல்லூர் தொகுதிக்கு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை” என்றார்.
இதைத் தொடர்ந்து புளியங்குடியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டினால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு கோபம் வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் நலனுக்காக எதைப் பற்றியும் பேசுவதில்லை. மக்கள் பிரச்சினைக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தியதா?
திமுகவை எதிர்த்து 122 ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினோம். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் அதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தியதா? தூய்மை பணியாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். அதை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு போராட்டம் நடத்தியதா?
கம்யூனிஸ்ட் கட்சிகள் கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக ஆகிவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளை தேடிப் பார்கும் நிலை வந்துவிட்டது. திமுகவை விமர்சனம் செய்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் கோபம் வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது. முன்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களுக்காக பாடுபட்டனர். இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டணிக்காக கூவிக்கொண்டு இருக்கின்றனர்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பின்னர், சங்கரன்கோவிலில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். முன்னதாக, காலையில் குற்றாலத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.