சென்னை: சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீஸாருக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை நடைபெறுகிறது.
சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸாருடன், ஆயுதப்படை போலீஸாரும் இணைந்து பணியில் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பிரிவுகளில் உள்ள பெண் போலீஸாரும், இரவுப் பணி மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பெண் போலீஸாரின் பணிச்சுமையை குறைக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பேணிக்காக்கவும், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் நிர்வகிக்க வசதியாக, இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை பரிசீலித்த சென்னை காவல் ஆணையர் அருண், 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் தலைமை காவலர்கள், பெண் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பெண் காவல் ஆய்வாளர்களுக்கு இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு பெண் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.