புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 13-ம் நாளான இன்று, மக்களவை மற்றம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடின. மக்களவை கூடியதும், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதன் 80ம் ஆண்டை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், முதலில் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை 12 மணிக்குக் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் காலை 11 மணிக்குத் தொடங்கினார். மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநருமான சத்ய பால் மாலிக்கின் மறைவு குறித்து அவைக்கு அறிவித்த ஹரிவன்ஷ், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
அதன்பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை விதி எண் 267ன் கீழ் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் விதி எண் 267க்கு பொருந்தாது என தெரிவித்த ஹரிவன்ஷ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பலாம் என கூறினார். இதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.