புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதால் கூடுதல் அபராதமும் செலுத்த நேரிடும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க இந்தியா ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி திட்டத்தை தயாரித்து வருகிறது.
தற்போதைய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இருந்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க புதிய விரிவான உத்திகளுடன் கூடிய இந்த ஏற்றுமதி திட்டத்தை மத்திய அரசு அடுத்த சில வாரங்களில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிராண்டு இந்தியா’ பெயரில் பொருட்களை சந்தைப்படுத்துமாறு வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வர்த்தக ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து பாதுகாக்கும் என்று அரசு நம்புகிறது.
இதனை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், கடன் அணுகலை எளிதாக்குவதையும், சர்வதேச சந்தைகளில் வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்வதையும் மையமாகக் கொண்டிருக்கும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியில் இந்த திட்டம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த சவாலான காலகட்டத்தில் இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான நமது ஏற்றுமதியை ஆதரிக்க முடிந்தால் அது இந்தியாவுக்கு மிக சாதகமாக இருக்கும்” என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறியுள்ளார்.