புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட நாளிதழ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன்காரணமாக பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை அடைந்து தனி நாடாக உதயமானது. கடந்த 1971-ம் ஆண்டு போருக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இதுதொடர்பாக கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான நாளிதழ் பதிவை இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமை நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டது.
அதில், “இதே நாள், 1971-ம் ஆண்டு. பாகிஸ்தானை போருக்கு தயார்படுத்த அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்ட 1971 ஆகஸ்ட் 5-ம் தேதியிட்ட ஆங்கில நாளிதழ் பதிவில், அ்ப்போதைய அமைச்சர் வி.சி. சுக்லா மாநிலங்களவையில் அளித்த விளக்கம் விவரிக்கப்பட்டு உள்ளது.
“பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்று நேட்டோ நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் வலியுறுத்தி உள்ளோம். இதன்படி பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க ரஷ்யா, பிரான்ஸ் மறுத்துவிட்டன. ஆனால் அமெரிக்கா மிகக் குறைந்த விலையில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.
கடந்த 1954-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதே போல சீனாவும் பாகிஸ்தானுக்கு தேவையான ஆயுதங்களை மிகக் குறைந்த விலையில் விநியோகம் செய்து வருகிறது” என்று வி.சி. சுக்லா கூறியது நாளிதழில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த சூழலில் இந்திய ராணுவம் வெளியிட்ட நாளிதழ் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராணுவத்தின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.