சென்னை: தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட கருணாநிதி நினைவு நாளில் உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: நான்காண்டு கால திமுக ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். தமிழகத்தின் உரிமைகளை காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்ச நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு.
அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் கருணாநிதி தான். தமிழகத்தின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அதிமுக, தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.
உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படை கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராக பயணித்து, பொய்களைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத பாஜக அரசு, சம்ஸ்கிருத மொழிக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுக்கிறது.
இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் தேசியக் கல்வி கொள்கை-2020 மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியை பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையை கொண்டு வரத்துடிக்கிறது.
அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை பாஜக அரசு வெளியிட மறுக்கிறது. ஆரிய பண்பாட்டை நம் மீது திணிக்க பார்க்கிறது. நாம் பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது.
கருணாநிதி வழியில்.. “வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை“ என்றார் கருணாநிதி. திமுகவின் களத்தில் வீரர்களாக நிற்கிறார்கள். தமிழை காக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும் திமுக என்றென்றும் கருணாநிதி வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தன் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும். என்றென்றும் கருணாநிதி நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான தொண்டர்களில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன்.
ஆக.7-ம் தேதி கருணாநிதி நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவை போற்றுவோம். வங்க கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆக.7-ம் தேதி நடைபெறும் அமைதி பேரணியில் தொண்டர்கள் கடலென திரண்டு வணக்கத்தை செலுத்துவோம்.
மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைகளுக்கு அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைதோறும் கருணாநிதியின் நினைவு போற்றப்பட வேண்டும்.
வீடுகளிலும், வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் கருணாநிதி படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். கருணாநிதியின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழி பயணத்தை தொடர்ந்து, 2026 சட்டப்பேரவை தேர்தலில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்து களத்தில் வெல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.