சென்னை: இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மக்களைக் காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை கோவையில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினேன். இதுவரை 21 நாட்களில் 14 மாவட்டங்கள், 61 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன். சுமார் 25 லட்சம் மக்களை சந்தித்து, நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, எண்ணவோட்டங்களைக் கேட்டறிந்தேன். இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்துக்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
எனது பயணத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்து வரும் பேராதரவிலும், அவர்ளின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். எனது பயணத்தில் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்தேன். அப்போது, அவர்கள் அனைவரும், ஸ்டாலின் அரசால் தாங்கள் படும் துயரங்களையும், தங்கள் குறைகளையும், எங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையும் என்னிடம் தெரிவித்தனர்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு முற்றிலும் தவறியதால் திருட்டு, கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களைத் தொடர முடியாமல், ஆளத்தெரியாத திமுகவுக்கு 7-வது முறையாக அல்ல, இன்னமும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி தமிழகத்தில் இடமே இல்லை.
அதிமுக வாக்குறுதி: இந்த அலங்கோல ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் கோபத்துடனும் இருக்கின்றனர். இந்த மோசமான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். தமிழக மக்கள் இழந்த அமைதி, வளத்தை மீட்டுத் தருவதுதான் எனது முதல்வாக்குறுதியாக, தமிழக மக்களுக்கு அளித்துள்ளேன். திமுக அரசால் முடக்கப்பட்ட, அதிமுக அரசின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நான் அளித்துள்ளேன்.
மேலும், தீபாவளிக்கு சேலை, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை, சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய், 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள், காவிரி-குண்டாறு திட்டம், தாமிரபரணி – வைப்பாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளேன்.
2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியால் மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பது தான் நமது முக்கிய பணி. தொண்டர்கள் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.