சென்னை: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமென யுஜிசி எச்சரித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்கள், கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிடம் இருந்து பட்டங்கள் பெறுவதை எளிதாக்கி வருவதும் யுஜிசி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, சில தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணைய வழியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குவது தொடர்பாக செய்தித் தாள்கள், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு எந்த அனுமதியும் யுஜிசியால் வழங்கப்படவில்லை. எனவே, அத்தகைய பட்டங்களும் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது. இது தவிர இத்தகைய செயல்களில் ஈடுபடும் உயர் கல்வி நிறுவனங்கள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.