ஜெய்ஸ்வாலின் 2-வது இன்னிங்ஸ் சதம், ஜடேஜாவின் அரைசதம் அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் சுந்தரின் கடைசி நேர பெரிய சிக்ஸர்கள் மூலம் கிடைத்த 39 ரன்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நேற்றைய ‘உதய சூரியன்’ பந்தயத்தின் ‘வெற்றிக் குதிரை’ சிராஜின் போர்க்குணம் மற்றும் விடாமுயற்சி, வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற உறுதி கொண்ட மனத்திடம் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி தொடரை டெஸ்ட் தொடர் வரலாற்றின் ஆகச்சிறந்த தொடராக மாற்றியது.
இந்நிலையில், பாஸ்பால் என்று பிரெண்டன் மெக்கல்லம் செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இங்கிலாந்தின் அணுகுமுறை அவர்களுக்கு மீண்டுமொரு முறை இந்திய அணிக்கு எதிராக தொடரை வெல்லும் பாக்கியத்தை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை மெக்கல்லம் ஒப்புக் கொண்டார் என்பதை விட இந்திய அணி கடுமையாக இந்தத் தொடரில் ஆடும் என்பதைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தோம் என்று கூறியதோடு முகமது சிராஜின் கேரக்டரை வெகுவாகப் பாராட்டினார்:
“நான் பங்கு பெற்றதிலேயே மிகச்சிறந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இது மட்டும்தான். 6 வாரங்களாக 5 டெஸ்ட் போட்டிகளும் இரு தரப்புமாக மாறி மாறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் அனைத்தும் இருந்தது. போர்க்குணம், சண்டை, சகோதரத்துவம், அன்பு, சில வேளைகளில் சாதாரணமான சராசரி கிரிக்கெட், சில வேளைகளில் உக்கிரமான ஆட்டம் அனைத்தும் இருந்த தொடராகும் இது.
இந்தத் தொடருக்கு வரும்போதே இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்திய அணி சோதிக்கும் என்பதை அறிவோம். இரு அணிகளுமே சோதிக்கப்பட்டன, கடும் சோதனைக்குள்ளாகின. 2-2 என்பது தொடர் ஆடப்பட்ட உக்கிரத்திற்கான நியாயமே.
நான் பங்கு பெற்றதில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் இது, அதுவும் சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்திய போது கடும் ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரராக அவரிடம் உள்ள போராட்டக் குணத்தில் அசந்து விட்டேன். அவர் என்ன செய்தாரோ அவர் அதைச் செய்த விதம் அபாரம்.
6 கேட்ச்கள் டிராப் பற்றி…. அனைத்து போட்டிகளும் 5-ம் நாள் வரை சென்றது, இரு அணிகளும் ஆடிய உக்கிரமான ஆட்டம், கடும் அழுத்தம் என இத்தனை சோதனைகளில் கேட்ச்கள் விடப்படுவது இயற்கைதான். ஆம்! கடைசியாக கேட்ச்களை எடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை அப்படிப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக இந்தத் தொடர் ஒரு மிகச்சிறந்த காட்சிப்பொருளாக இருந்தது.
விடப்பட்ட கேட்ச்கள் எப்போதும் இருக்கவே செய்யும். முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும் விட்ட கேட்ச்களை எண்ணி இப்போது திரும்பிப் பார்க்கும். லார்ட்ஸில் கூட ஆட்டத்தின் இயற்கையான போக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகளை சாத்தியமாக்கவே செய்யும். ஏன் ஜோ ரூட், புரூக் ஆடிய விதம் போட்டி அன்றே முடிந்துவிடும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்தியா மீண்டெழுந்து 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெல்கிறது என்பதுதான் இந்த ஆட்டத்தின் அருமையான ஒரு போக்கு.
நாங்கள் இதே பாணி கிரிக்கெட்டைத்தான் ஆடுவோம். இந்தப் பாணியைக் கைவிட்டோமானால் நாங்கள் பலவீனமாகி உடைந்து நொறுங்கும் நிலைக்கு வந்து விடுவோம். நாம் நம்பும் விஷயத்திற்கு உண்மையாக இருந்தால் அது நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். லார்ட்ஸில் அதைத்தான் செய்தோம்.
பேட்டிங்கில் தைரியமாக ஆடினோம். ஆனால் தோல்வி எங்கிருந்து வந்தது என்பது கண்டுபிடிப்பது கடினம். நம் பாணியில் நாம் ஆடுவது நமக்கு உத்தரவாதத்தை அளிக்காவிட்டாலும் பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது” என இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் கூறினார்.