சென்னை: சொத்துப்பதிவின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிமாறப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பதிவுத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சொத்து பரிமாற்றத்தின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டது.
இதுகுறித்து, அப்போதே, அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில், ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் பெரும்பாலும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாமல் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே, சொத்து விற்பனையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தகவல் தெரிவிக்காவிட்டால், மாநில தலைமைச்செயலர் கவனத்துக்கு கொண்டு சென்று பதிவு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தற்போது பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும். அதற்கான அறிக்கை, ஆவணத்தின் நகலை பாதுகாக்க வேண்டும்.
ஒருவேளை தகவல் தெரிவிக்காதது அல்லது காலம் தாழ்த்தியது தெரிந்தால், மாவட்ட பதிவாளர்கள் அதுகுறித்த அறிக்கையை மண்டல துணை பதிவாளர்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளர் பதிவுக்கு வரும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். பதிவு அலுவலர்கள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்கள் உரிய அறிவுறுத்தல்களை பதிவு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.