சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களை தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.7-க்கு தள்ளி வைத்துள்ளது.
தமிழக அரசின் திட்டங்களான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ அல்லது உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களையோ பயன்படுத்தக் கூடாது என தடைகோரி அதிமுக எம்.பி.யான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் திட்டங்களில் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அதேபோல அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றுடன் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் படங்கள், பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால் அவரை அரசியல் ஆளுமையாக கருத முடியாது. அதேபோல, அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற அரசின் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டதால் அந்த திட்டங்களை தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த மனு வரும் ஆக.6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்றும் சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்குப் பிறகு இந்த மனுவை விசாரிக்கலாம் எனக் கூறி விசாரணையை ஆக.7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
திமுக சார்பில் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
புதுடெல்லி: உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி திமுக சார்பில் அனுராதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று முறையீடு செய்தனர். அதையேற்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை நாளை (ஆக.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.