புதுடெல்லி: ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்கக்கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட விவரங்கள் மூலமாக ‘ஓடிபி’ எண்ணைப் பெறக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து திமுக வழக்கறிஞர் அனுராதா அற்புதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது உண்மைத்தன்மையை உறுதி செய்யவே ஓடிபி பெறப்படு்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு பொதுமக்களுக்கு திமுக தொல்லை அளித்து வருவதாகக்கூறி இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
திமுகவில் சேர விருப்பம் தெரிவிக்கும் நபர்களிடம் மட்டுமே ஓடிபி எண் பெறப்பட்டு விவரங்கள் உறுதி செய்யப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஓரணியில் தமிழ்நாடு மூலமாக உறுப்பினர் சேர்க்கை என்பது அதுவும் ஒருவகையில் வாக்காளர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நடவடிக்கையே.
கடந்த ஒருமாதமாக நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக இதுவரை 1.7 கோடி பேர் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது உயர் நீதிமன்றத்தின் ஓடிபி தடை உத்தரவால் திமுகவின் உறுப்பினர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தடையை நீக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்துகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளைப் போலவே திமுகவும் தமிழகம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி வருகிறது. ஆதார் எண்களைப் கேட்டு பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்படாத தடையை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்றார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த ராஜ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆக.5 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்றார். அதையடுத்து நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடுவது பொருத்தமாக இருக்காது என்பதால் இடைக்காலத் தடையை நீக்க முடியாது எனக்கூறி திமுகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடவும் அறிவுறுத்தியுள்ளனர்.