சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட் டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் இறந்தார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆணவக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரியும் ஜெயசூர்யாவின் தந்தை எம்.முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், ‘‘ஜெயசூர்யா, கல்லூரியில் படித்த மாற்று சமுதாய மாணவி ஒருவரை காதலித்து வந்ததால் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெயசூர்யாவை மிரட்டி வந்ததாகவும், இதனால் ஜெயசூர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்’’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘மனுதாரர் தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிப்பதால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுகிறேன். வழக்கு தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட போலீஸார் 2 வாரங்களில் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உண்மையிலேயே ஆணவக்கொலையாக இருந்தாலும் சில நேரங்களில் உண்மை வெளியே வருவதில்லை’’ என வேதனை தெரிவித்தார்.