சென்னை: பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல் மருத்துவர்களை கடலூர், புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதை அரசு கைவிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், கடலூர், புதுக்கோட்டை கல்லூரிகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததால், அந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இல்லாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 27 பல் மருத்துவர்கள் அந்த கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அரசு பணிக்கு பல்மருத்துவர்களும் தேர்வு செய்யப்படவில்லை. அதனால்தான், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், அவசர அவசரமாக மற்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள பல் மருத்துவர்கள் கடலூர், புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கின்றனர். இதனால், அவர்கள் ஏற்கெனவே பணியாற்றி வந்த அரசு மருத் துவமனைகளில் பல் மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சேவை கிடைக்காமல் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
தவிர, விருப்பமின்றி 100 கி.மீ. தூரத்துக்கு இடமாற்றம் செய்வதால், குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தாததும், புதிதாக பல் மருத்துவர்களை பணி நியமனம் செய்யாததும் அரசின் தவறு. இதற்காக பல் மருத்துவர்களை தண்டிப்பது நியாயம் அல்ல.
மருத்துவர்களையும், மக்களையும் பாதிக்கும் ஆள்குறைப்பு திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும். புதிய பல் மருத்துவ கல்லூரிகள், இதர அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பல் மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நியமிக்க வேண்டும். அதற்கு முன்பு, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.