சென்னை மதுரவாயலில் இருந்து பெங்களூர் வரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில், இரு வேறு இடங்களில் தற்போது, பாலம் கட்டுவதற்கு, சாலையை ஒட்டி 15 அடி நீளத்துக்கும், 10 அடி ஆழத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
சாலையை ஒட்டி பணிகள் நடந்து வரும் நிலையில் பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்கப்படாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணிகள் காரணமாக சாலையும் குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்களை முந்தி செல்ல முயன்று, இருசக்கர வாகனங்கள்,அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து குமராசாமி என்பவர் கூறியது: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியால், வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்படுள்ளது.
மேலும், பணிகள் நடக்கும் இடத்தில் கம்பிகள் நீட்டியபடி உள்ளதால் வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.