தூத்துக்குடி: தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள் என்றும் அவர் கூறினார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. வின்பாஸ்ட் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, பெ.கீதாஜீவன், அனிதா ஆர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கார் தொழிற்சாலையை திறந்து வைத்து, முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார காரில் கையெழுத்திட்டு அதன் இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேட்டரி காரில் பயணித்து ஆலையை சுற்றி பார்த்தார். மேலும், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு பயிற்சி பெற்ற 229 டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தமிழக வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் அடிக்கல் நாட்டப்பட்டு 17 மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இந்த பெருமையில் முக்கிய பங்கு உண்டு. டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்பாஸ்ட் ஒரு சாட்சியாக உள்ளது. இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கக்கூடிய வின்ஃபாஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு தமிழ்நாட்டு முதல்வராக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவின் வாகன உற்பத்தியில் மற்றும் மின் வாகன உற்பத்தியின் கேப்பிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட்.
தற்போது தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். நான் உறுதியோடு சொல்கிறேன், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள்.
இதுதான் தமிழ்நாட்டின் ஈசி டுயிங் பிசினசுக்கு முக்கியமானது. முதல் கட்டமாக ரூ.1300 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்வாகனம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே வியட்நாமுக்கு வெளியே தொடங்கப்பட்டுள்ள முதல் மின்வாகன உற்பத்தி நிலையம் இதுதான். தமிழ்நாட்டில் நமது தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலை தான் இந்தியாவிலேயே முதலாவது முழு மின்சார வாகன உற்பத்தி நிலையமாகும். இதனால் இந்த வட்டார இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சியின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட டிப்ளமோ மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அது மட்டும் அல்ல, கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் பணியாளர்கள் தூத்துக்குடி மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திராவிட மாடல் அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளது. தூத்துக்குடியை சுற்றி உள்ள மாவட்டங்களில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில்கள் வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஓசூர் ஆகியவற்றை தொடர்ந்து வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழில் மையமாக தூத்துக்குடி உருவெடுத்து உள்ளது. இப்படித்தான் ஒவ்வொரு மண்டலமாக பார்த்து பார்த்து வளர்த்து வருகிறோம். இந்தியாவின் 2-வது முழு மின் வாகனம் உற்பத்தி திட்டத்தை 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா நிறுவனத்தின் மின் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டினேன்.
இதன் மூலம் தமிழ்நாடு தான் மின்வாகனத்தில் முதலிடம் என்று உலகுக்கு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹூண்டாய், நிசான், டாடா மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ, பி.ஒய்.டி, ஓலா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் மின்வாகன உற்பத்தியை தொடங்கி உள்ளன. இன்னும் பல பாரம்பரிய கார் நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தியை தொடங்க உள்ளன.
வின்ஃபாஸ்ட் குழுமம் வாகனத் துறையில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் கோலோச்சக்கூடிய குழுமம். உங்களுடைய வருங்கால முதலீடுகளை தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு முதல்வராக கேட்டுக் கொள்கிறேன். வின்பாஸ்ட் தொடங்க உறுதுணையாக இருந்த திராவிட மாடல் அரசு உங்களுடைய எல்லா முதலீடுகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், த.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் பிரகலாதன் திரிவாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.