பெங்களூரு: முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆபாச குறுஞ்செய்தியும் பலாத்கார மிரட்டலும் விடுத்த 4 பேரை பெங்களூரு போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதானார். அவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து கன்னட திரைப்பட நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா, ‘‘கொல்லப்பட்ட ரேணுகா சாமியின் குடும்பத் துக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், பலாத்கார மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ரம்யா புகார் அளித்தார்.
இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங் தலைமையிலான போலீஸார் ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்தநபர்களை தேடி வந்தனர். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக கண்டறிந்து, பவன் கவுடா, ராஜேஷ், கங்காதரா, ஒப்பன்னா ஆகிய 4 பேரை நேற்றுகைது செய்தனர். இதுகுறித்து காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் கூறுகையில், ‘‘முன்னாள் எம்பி ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 11 பேரின் அடையாளம், முகவரி ஆகியவற்றை கண்டறிந்திருக்கிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்வோம்” என்றார்.