புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவராக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக இருந்த சுதிப் பந்தோபாத்யாயா, உடல்நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 29 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் இக்கட்சி இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.