புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுமானால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் 21 அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் எஸ்ஐஆர் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
தற்போது, பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்புத் தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அளித்து வருகின்றன. எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்றும் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மசோதாக்கள் குறித்து முழுமையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால், நாட்டின் நலன் கருதி மசோதாக்களை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவை குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. இந்த மசோதாக்களை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. எனவே, நாளை முதல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்தும்” என தெரிவித்தார்.