‘கூலி’ ட்ரெய்லரை வைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. தமிழ்நாட்டின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தெலுங்கு நிகழ்வு நடைபெற்றது. சமீபத்தில் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் காட்சிகளை வைத்து சயின்ஸ் பிக்ஷன் கதை, டைம் டிராவல் கதை என்றெல்லாம் இணையத்தில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ஹைதராபாத் நிகழ்வில் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “‘கூலி’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு மக்கள் சயின்ஸ் பிக்ஷன், டைம் டிராவல் படம் என்று சொல்வதைப் பார்த்தேன். கதைக்களம் எதைப் பற்றியது என்று அனைவரும் நினைக்கும் விஷயங்களை படித்தேன். அவை அனைத்து உற்சாகத்தை தந்தது. ஏனென்றால், படம் வெளியான பிறகு மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் என பலர் நடித்துள்ளர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.