புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷிபு சோரன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஷிபு சோரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஷிபு சோரனின் மறைவு, சமூக நீதி களத்துக்கு ஒரு பெரிய இழப்பு. பழங்குடி அடையாளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்துக்கு ஆதரவாக இருந்தவர். அடிமட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றிய அவர், ஜார்க்கண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பங்களித்தவர்.
பொதுமக்களின் குறிப்பாக பழங்குடி மக்களின் நலன்களில் ஆவர் காட்டிய அக்கறை எப்போதும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ஷிபு சோரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஷிபு சோரன் அடிமட்டத் தலைவராக இருந்தவர். அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பொது வாழ்க்கையில் உயர்ந்தவர்.
குறிப்பாக, பழங்குடி சமூகங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன. ஹேமந்த் சோரனுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
போராட்டம் தள்ளிவைப்பு: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி வரும் வாக்கு திருட்டு விவகாரத்தைக் கண்டித்து பெங்களூருவில் நாளை (ஆக.5) நடைபெறுவதாக இருந்த போராட்டம் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பெங்ளூருவில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர், காங்கிரஸ் தலைவர் கார்கேவும், ராகுல் காந்தியும் நாளை ஷிபு சோரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறினர்.
பினராயி விஜயன்: “முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதிவாசி மக்கள் மற்றும் ஜார்க்கண்ட் மக்களின் நலன்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும். ஹேமந்த் சோரன், அவரது குடும்பத்தினர், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், செல்வாக்கு மிக்க பழங்குடி தலைவருமான ஷிபு சோரனின் மழைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்துள்ளது. சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு, சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவையே ஷிபு சோரனின் வாழ்வாக இருந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கத்துக்கான இயக்கத்தின் முக்கிய கட்டமைப்பாளர் அவர். ஆதிவாசி மக்களின் உறுதியான போராட்டங்களின் மூலம் புதிய மாநிலம் உருவாக வழிவகுத்தவர். உயர்ந்த தலைவரை, வாழ்நாள் முழுவதும் போராடியவரை இழந்து வாடும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும், ஜார்க்கண்ட் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.