இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறியாக அமைந்த அம்சங்களில் ஒன்றுதான் ‘அசைவ பால்’ சர்ச்சை. இது குறித்து இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். அது ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்தியாவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வரும் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், வேளாண் துறை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுப்பதால், இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரச்சினை ‘அசைவ பால்’. அதென்ன அசைவ பால்! என்று கேட்கிறார்களா? இதோ அதற்கான விளக்கம்…
இந்தியாவில் ஆடு, மாடு, ஏன் சில பகுதிகளில் ஒட்டகப் பால் கூடப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விலங்குகள் இயற்கையான மேய்ச்சலில் கிடைக்கும் உணவு அல்லது பராமரிப்பாளர்கள் வழங்கும் புல், இலை, தழை, பருத்தி, புண்ணாக்கு போன்ற சைவ தீவனங்களை உண்கின்றன. ஆனால், அமெரிக்காவில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் எடையை அதிகரிப்பதற்காக, அவற்றிலிருந்து பெறப்படும் பாலில் கொழுப்பு, புரதம் மிகுவதற்காக விலங்குகளின் ரத்தம், எலும்பு, இறைச்சி ஆகியனவற்றை அரைத்து சேர்த்த தீவனங்கள் வழங்கப்படுகின்றன. இதனை ‘பிளட் மீல்’ (ரத்த உணவு) என்கின்றனர்.
இவ்வாறாக ‘ப்ளட் மீல்’ வழங்கப்பட்ட விலங்குகளில் இருந்து பெறப்படும் பால்தான் ‘அசைவ பால்’ என்றழைக்கப்படுகிறது. இதனால்தான் அமெரிக்க பால், பால் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா ‘நோ’ சொல்கிறது.
“அமெரிக்க பசுக்களில் இருந்து வரும் பால் ‘அசைவ பால்’ என்று நாங்களாக சொல்லவில்லை, உங்கள் நாட்டிலிருந்து வெளியாகும், ‘சியாட்டல் போஸ்ட் இண்டலிஜென்சர்’ நாளிதழில் 2024-ல் வெளியான ஓர் அறிக்கையில், ‘அமெரிக்காவில் பன்றி, மீன், கோழி, குதிரைகள், பூனை, நாய்களின் இறைச்சியை பசுக்கள் உண்ண அனுமதிக்கப்படுகின்றன. புரதத்துக்காக பன்றிகள், குதிரைகளின் ரத்தம் கலந்த தீவனங்களும் வழங்கப்படுகின்றன. பசுக்களின் எடையை அதிகரிக்க விலங்கு கொழுப்பும் தீவனமாக வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என ஆதாரத்தை முன்வைக்கிறது இந்தியா.
சரி, ஏன் இந்த ‘ப்ளட் மீல்’ என்று சற்று ஆழமாக அலசினால், ’ப்ளட் மீல்’ மூலம் பசுக்களுக்குத் தேவையான லைசின் என்ற அமினோ அமிலம் எளிதில் கிடைக்கிறது. இந்த ‘லைசின்’ என்ற எஸன்ஸியல் அமினோ அமிலம், தாவர உணவுகளில் மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் பசுக்களுக்கு தொடர்ச்சியாக ‘ப்ளட் மீல்’ வழங்கப்படுகிறது.
‘ப்ளட் மீல்’-ல் கிடைக்கும் அமினோ அமிலங்களை பசுக்கள் எளிதாக செரிமானம் செய்துவிடும் என்பதாலும் இது வழங்கப்படுகிறது. இன்னொருபுறம் ப்ளட் மீல் தயாரிப்பால் இறைச்சிக் கூடங்களில் கழிவுகளைக் கையாள்வதும் எளிதாகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறைகிறது என்ற வாதமும் நிலவுகிறது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பால், பால் பவுடர், நெய், வெண்ணெய் எல்லாமே இத்தகைய அசைவ பாலில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை இந்தியர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை மத, கலாச்சார வாதங்களாக முன்வைக்கிறது இந்தியா.
பசும் பால் என்பது இந்தியாவில் புனிதமானதாகக் கருதப்படும் உணவு. இந்துக்கள், ஜெயின் சமூக மக்கள் தங்களின் பூஜை வழிபாடுகளில் பசும் பாலை பிரதான பொருளாக கருதுகின்றனர். இந்திய மக்களின் மத, கலாச்சார உணர்வுகளைப் புண்படுத்தும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்கிறது இந்தியா.
அதனால், இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய குடிமக்களின் நம்பிக்கையை பாதுகாக்க அமெரிக்காவில் இருந்து பால், பால் சார்ந்த பொருட்களை அனுமதிப்பது என்றால் அது நிச்சயமாக ‘சைவ பால்’ என்ற உத்தரவாத சான்றிதழ் பெற்றதாகவே இருக்க வேண்டும் என்று கெடுபிடியும் காட்டுகிறது இந்தியா. அமெரிக்காவோ, தங்களின் பால், வேளாண் பொருட்கள் வர்த்தகத்துக்கு இந்தியா கெடுபிடி காட்டுவதை ‘தேவையற்ற வர்த்தக தடை’ என்கிறது.
மேலும், நவம்பர் 2024-ல் இந்தியா, பால் பொருட்கள் வர்த்தகத்துக்கான புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை வெளியிட்டது, அதில் அசைவ பால் பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறது அமெரிக்கா.
இந்தப் பிரச்சினை உலக வர்த்தக மையம் வரை எட்டிவிட்டது. என்ன சொன்னாலும் சரி, 140 கோடி மக்களின் நம்பிக்கை, 8 கோடி மக்களின், குறிப்பாக சிறு, குறு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சமரசம் செய்யவே மாட்டோம் என்று இந்தியா கூறுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கூட முன்னெடுக்க தயாராக இல்லை என்று இந்தியா கடுமையான கெடுபிடி கொடுத்து வருகிறது.
இயற்கையாகவே தாவர உண்ணிகளான பசுக்களுக்கு இதுபோன்ற ‘ப்ளட் மீல்’ கொடுப்பது சரிதானா, அது ஒருவகையில் விலங்குகளை வதைப்பது ஆகாதா என்ற விவாதங்களும், அவ்வாறான உணவை உட்கொள்ளும் பசுக்களில் இருந்து பெறப்படும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுமா என்ற ஐயப்பாடுகளும் நிலவுகின்றன.
தற்போது அமெரிக்க உணவு தானியங்களுக்கு சுமார் 40 சதவீத இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது. இந்த வரியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. குறிப்பாக, அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு மறுத்துவிட்டது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ற விவசாயம், பால் பொருள் சந்தைகளைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மட்டோம் என்றும், குறிப்பாக, ‘அசைவ பால்’ இறக்குமதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறிவருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.