மதுரை: டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம் ராஜ வீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு செய்வது டிஜிபி நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தமிழகத்தில் 2026-ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசு உயர் பதவிகளில் தங்களுக்கு சாதகமானவர்களை வைத்துக்கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டியது அவசியம்.
எனவே தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை ஓய்வுக்கு பிறகு, பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும், சங்கர் ஜிவாலின் பணிக் காலத்தை நீட்டிப்பு செய்யவும் இடைக்கால தடை விதித்தும், டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு உடனடியாக தயார் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு புதிய டிஜிபி நியமனம் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2006-ல் பிரகாஷ் சிங் வழக்கில் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை 2019ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவுபடுத்தியுள்ளார். டிஜிபி பதவியை சீனியர்களுக்கு தான் வழங்க வேண்டும் என நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியுள்ளனர். டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
இருப்பினும் இந்த வழிகாட்டுதல்களை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பின்பற்றுவது இல்லை. எனவே டிஜிபி நியமனத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ? என்பது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். இதில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும். மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆக.11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தவிட்டனர்.