திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கண்ணாலப்பட்டி, பெருமாள் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் ஸ்ரீராம் (18). மாற்றுத்திறனாளியான இவர் பெரிய கண்ணாலப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023- 2024-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் இந்த ஆண்டு பங்கேற்ற மாணவர் ஸ்ரீராம் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவருக்குக் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர் ஸ்ரீராம் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்து விட்டார். ஸ்ரீராம் 4-ம் வகுப்பு படிக்கும்போது வலது காலில் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு, அவரது வலது காலில் இரும்பு ராட் வைக்கப்பட்டது.
இதனால் அவரது தாயார் தனது மகனைக் கூலி வேலை பார்த்து அங்கு உள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஸ்ரீராமுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தப் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இது குறித்து மாணவர் ஸ்ரீராம் கூறும்போது, ‘‘சிறுவயதிலேயே மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், நான் சிறுவனாக இருக்கும் போதே என் தந்தை உயிரிழந்து விட்டார். நானும், நோயால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி ஆனேன். சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்பது எனது லட்சியம். அதற்காகவே நான் மேல்நிலை கல்வியிலும், நீட் தேர்வுக்கான பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன்.
அதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எனக்குக் கோயம்புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி நீடிப்பதற்குள் எனது மருத்துவக்கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் தான் நாளுக்குள் நாள் எனக்குள் அதிகரித்துள்ளது.
சிறு வயதிலேயே மருத்துவமனையில் அவதிப்பட்ட நான் நன்றாகப் படித்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளேன். மருத்துவப்படிப்பில் சேர வேண்டும் என்பதால் நீட் தேர்வுக்காகக் கடுமையாக உழைத்தேன். நீட் தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தற்போது மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் என் குடும்பத்தார் படும் அவதியை நினைத்தால் நான் மருத்துவர் ஆக முடியுமா ? என்ற ஐயம் எனக்குள் எழுந்துள்ளது. என் கனவை நிறைவேற்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்தால் நிச்சயம் சிறந்த மருத்துவராக என்னால் வர முடியும்’’ என்றார் தன்னம்பிக்கையுடன்.
இது குறித்து மாணவர் ஸ்ரீராம் மேல்நிலைக் கல்வி முடித்த கண்ணாலப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “கண்ணாலப்பட்டி அரசுப் பள்ளியில் இதுவரை 6 மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு சென்றுள்ளனர். தற்போது ஸ்ரீராம் 7-வது நபராகத் தேர்வாகி உள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவனுக்கு உதவப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்த நிதியைத் திரட்டி வருகிறோம். இது போதுமானதாக இருக்குமா ? தெரியவில்லை. உதவும் உள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டினால் மாற்றுத் திறனாளி மாணவரின் மருத்துவக்கனவு நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை’’ என்றனர்.