புதுடெல்லி: இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் நீங்கள் இப்படி சொல்ல மாட்டீர்கள் என தெரிவித்துள்ளது.
‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 2022, டிசம்பர் 16 அன்று பேசும்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா லக்னோவில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கை எதிர்த்து லக்னோ உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எந்த அடிப்படையில் கூறினீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி சொல்ல மாட்டீர்கள். எல்லையில் மோதல் நடந்து கொண்டிருக்கும்போது இப்படியா சொல்வது?” என கண்டித்தனர்.
அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், “அவர்(ராகுல் காந்தி) ஏன் இதை நாடாளுமன்றத்தில் பேசவில்லை? ஏன் சமூக ஊடகங்களில் பேசுகிறார்?” என கேட்டனர்.
அதற்கு அபிஷேக் மனு சிங்வி, “எதிர்க்கட்சித் தலைவராக அவர் அப்படி சொல்ல முடியாவிட்டால், ஜனநாயக உரையாடல் எவ்வாறு நடக்கும்?” என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “எல்லையில் மோதல் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசக்கூடாது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பில் இருப்பவர் என குறிப்பிட்டனர். மேலும், பேச்சு சுதந்திரம் என்பது பொறுப்பின்றி எதையும் பேசுவதை அனுமதிப்பது அல்ல.” எனக் கூறினர்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கீழ் நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்க தற்காலிக தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.