திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் விவசாய பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த விவசாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
அதிமுக அரசு அமைந்ததும் இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். முந்தைய அதிமுக ஆட்சியின் போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏராளமான நீர் நிலைகளைத் தூர்வாரினோம். இதற்காக ஒரு 1500 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் கால்வாய்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. ஆறுகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் 2000 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதாக அறிவித்தனர். ஆனால் எதையும் செய்யாமல் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டனர்.
அதிமுக ஆட்சியின் போது நீர் மேலாண்மைக்கு என்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி அதில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்களை நியமித்து அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தடுப்பணைகளை அமைக்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினோம். ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்திருந்தோம். திறமையான அதிகாரிகளை நீர் மேலாண்மை திட்டங்களில் ஈடுபடுத்தினோம்.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை இரு முறை தள்ளுபடி செய்திருந்தோம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகமாக ஒரு 12 ஆயிரம் கோடி தொகையை விவசாயிகளுக்கு இழப்பீடாகப் பெற்றுத் தந்தோம். வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ. 2448 கோடி வழங்கப்பட்டிருந்தது. வேளாண் கருவிகள் வாங்கவும் சொட்டு நீர்ப் பாசனத்திற்கும் அதிக மானியம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
ஆவணங்களைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்கிறார்கள். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்க அவர்களிடம் பணம் இல்லை இதனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியாமல் அலைக்கழிப்பு செய்கிறார்கள். இது குறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்தோம். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
இப்போது ஷிப்ட் முறையில் மின்சாரம் வழங்குகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். தற்போது வணிகர்களுக்குப் பாதுகாப்பில்லை என்று வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் சிறு வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளித்தோம். யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி அமைந்திருந்தது. அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. இப்போது இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது. அதிமுக ஆட்சியில் வணிகர்களை வாட்டி வதைக்க வில்லை.
இப்போது ஜிஎஸ்டியால் துன்புறுத்தப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஜிஎஸ்டி இடர்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் இவ்வாறு பேசினார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ஆர் பி உதயகுமார், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.