கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளால், பெற்றோர் மற்றும் குழந்தைகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலையை சேர்ந்த பெற்றோர் கூறியதாவது: மகளை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில், 1-ம் வகுப்பில் சேர்த்தேன். சொற்ப வருவாயில் குடும்பம் நடத்துவது சிரமம் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம். இந்நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து பணம் வரவில்லை என்றும், மொத்த தொகையையும் கட்ட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது.
1-ம் வகுப்புக்கு பள்ளிக் கட்டணம் ரூ. 40 ஆயிரம் என தெரிவிக்கின்றனர். தற்போது கிடைக்கும் வருவாயில் வீட்டு வாடகை, குடும்ப செலவு போக மீதம் எதுவுமே மிஞ்சுவதில்லை. தற்போது பணம் கட்டச்சொல்லி நெருக்கடி தருவதால் எங்களுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. தனியார் பள்ளியில் இருந்து மாறினாலும், முழுத்தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான நிலையால் பெரும் மன உளைச்சலில் உள்ளோம், என்றார்.
மற்றொரு பெற்றோர் கூறும்போது, “மகள் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். ஆனால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் சேர்த்தோம். ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டும் தந்து ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். கட்டணத்துக்கான காரணத்தை மாற்றி மாற்றி வசூலிக்கின்றனர். பள்ளியில் ஆர்டிஇ (கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்) குழந்தை என்று தான் உள்ளது. அதற்கான எந்த சலுகையும் எங்களுக்கு இல்லை. மகளுக்கு பள்ளிக்கட்டணம் அதிகம் என்பதால், கூடுதல் நேரம் வேலைக்கு சென்று சேமித்து வருகிறேன்” என்றார்.
இதுதொடர்பாக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு 60 சதவீதம் நிதியையும், மாநில அரசு 40 சதவீதம் நிதியையும் ஒதுக்க வேண்டும் என்ற விதி கல்வி உரிமைச்சட்டத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொள்கை முரண்களை கைவிட்டு, நிதி ஒதுக்க வேண்டும். தனியார் சுயநிதிப்பள்ளிகளின் அருகில் வசிக்கும், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட அல்லது நலிவுற்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம்.
தனியார் பள்ளிகளில் ஏன் இந்த கல்வி உரிமை சட்டம் என்று பலரும் கேள்வி எழுப்பலாம்? ஏழைகள், பணக்காரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவருக்குமான வாய்ப்பை உருவாக்குது தான் இந்த கட்டாய கல்வித்திட்டம். ‘அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது தான்’ கல்வி உரிமைத் திட்டத்தின் அடிப்படை.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை மறுப்பது, கல்வி உரிமை மீறலாகும். குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியால், இன்றைக்கு இந்த திட்டத்தில் படிக்க வைக்கும் பெற்றோர் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தி, திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கி நடைமுறைப் படுத்த வேண்டும், என்றார்.