சென்னை: வேறு கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவிய நிலையில், “உடல் மண்ணுக்கு, உயிர் என் உயிர் அதிமுகவுக்கு” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு கட்சியில் சேரப்போவதாக யூடியூப் சேனல்களில் செய்திகள் வருகின்றன. நான் மானஸ்தன் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும். யார் வீட்டு முன்னாடியும் பதவிக்காக நான் நின்றதில்லை.
திராவிட பாரம்பரியத்தில் பெரியார், அண்ணா வழியில், அவருக்கு பின்னர் எம்ஜிஆர் வழியில் வந்தவன் நான். என் உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு. இதுதான் எனது கொள்கை, நிலைப்பாடு. ‘ஒன்றிணைவோம் வா’ என்று சொல்லி பல மாவட்டங்களில் திமுக கூட்டம் நடக்கும்போது, உட்கட்சி பூசல்கள் வெடிக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பதிலாக வேலைவாய்ப்பை பறித்து வருகின்றனர்.
பணிநிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கு தீர்வு காண அரசு விரும்பவில்லை. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எவ்வளவோ திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க தனது குடும்ப நலனுக்காக வளம்மிக்க துறைகளை திமுகவினர் பெற்றனர்.
இலங்கையில் இனப்படுகொலையின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதை தடுக்கவில்லை. எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு தேர்தல் வரும் போது புதிய அவதாரம் எடுத்து வருவார்கள். அது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.