புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேலும், என்.ஆர்.காங்கிரஸார் புதுச்சேரி முழுவதும் பரவலாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தொகுதிதோறும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள். 1950-ம் ஆண்டு ஆகஸ்ட்ட் மாதம் 4-ம் தேதி நடேச கவுண்டர்- பாஞ்சாலி அம்மாள் தம்பதிக்கு 5-வது குழந்தையாக ரங்கசாமி பிறந்தார். அவருக்கு 75 வயது பூர்த்தியடைந்து, இன்று 76-வது வயது பிறந்தது. முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் என்ஆர்.காங்கிரஸார் விமரிசையாகக் கொண்டாடுவர். இந்த ஆண்டும் தொகுதிதோறும் நலத்திட்ட உதவிகள் தருகின்றனர்.
காலையில் முதல்வர் ரங்கசாமி அவரது பெற்றோர் படத்தை வணங்கினார். பின்னர் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அச்செய்தியில், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் புதுச்சேரிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் நீண்ட ஆரோக்கிய வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பல்வேறு தொகுதிகளில் இருந்து வரும் என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.