சென்னை: துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் துணை மின்நிலைய வளாகத்தைவிட்டு வெளியே செல்ல கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் அழுத்த துணை மின்நிலையங்களில் தொடர்ந்து மின்சார உபகரணங்களை கண்காணிப்பது, அவசர காலங்களில் விரைவாக செயல்பட்டு மின் வழித்தடங்களை சீரமைப்பது, மின்தடை நேரங்களில் உடனடியாக செயல்பட்டு மின்விநியோகம் வழங்குவது ஆகிய பணிகளை துணை மின்நிலைய பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் நிலையில், சில நேரங்களில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பணியாளர்கள் இருப்பதாகவும், ஒரு சிலர் கூடுதலாக பணியை நீட்டித்து வேலை செய்வதாகவும், பணி நேரத்தின்போது வெளியே சென்று வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது மின் பகிர்மானத்தின் செயல்திறனை குறைப்பதோடு, பணியாளர் நலனையும் பாதிக்கிறது.
பணியாளர் அட்டவணை: இதை தடுக்க, பின்வரும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். துணை மின்நிலைய பணியாளர்கள் அட்டவணையை செயற்பொறியாளர் தயாரிக்க வேண்டும். அதன்படி மட்டுமே பணியாளர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் நபர்கள் பணியாற்றுவதை அனுமதிக்க கூடாது. இது அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப பணியாற்றுவதாக மாறிவிடும். பணி நேரத்தின்போது, துணை மின்நிலைய வளாகத்தைவிட்டு பணியாளர்கள் வெளியே செல்ல கூடாது.
பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் அல்லது உதவி பொறியாளர் உச்ச நேரங்கள் மற்றும் அவசர காலங்களில் துணை மின்நிலைய பணியாளர்களுக்கு உதவ வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை முதன்மை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதில் கவனக்குறைவாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.