திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ரைரு கோபால். மருத்துவரான அவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு அருகே மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது தந்தை ஏ.ஜி.நம்பியாரும் புகழ்பெற்ற மருத்துவர் ஆவார். “பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் மருத்துவத்தை ஒருபோதும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்க்கக்கூடாது’’ என்று தந்தை கூறிய அறிவுரைகளை ரைரு கோபால் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
கண்ணூர் எல்ஐசி அலுவலகம் அருகே நடத்தி வந்த மருத்துவமனையை தனது வீட்டுக்கு கோபால் மாற்றினார். அனைத்து நோயாளிகளிடமும் 2 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள், ரைரு கோபாலை, இரண்டு ரூபாய் மருத்துவர் என்று அழைத்தனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரைரு கோபால், ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரது மனைவி சகுந்தலா கணவருக்கு உறுதுணையாக இருந்து நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டில் ரைரு கோபால் மருத்துவ சேவையை நிறுத்தினார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த ரைரு கோபால் நேற்று காலமானார். மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கண்ணூர் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஆடம்பர வாழ்க்கையை துறந்து ஏழைகளுக்காகவே தனது வாழ்நாள் முழவதையும் அர்ப்பணித்தார். அவரது மறைவால் கண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது’’ என்றனர்.