லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் என பலர் நடித்துள்ளர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இந்தப் படம் தொடங்கியதும், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தூள் கிளப்பிடலாம் என்று சொன்னார். நான், ‘இது 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் ஓடியிருக்கு. பார்ட்ஸ் எல்லாம் மாத்தியிருக்காங்க. ரொம்ப ஆடவச்சிராதீங்க, பார்ட்ஸ் கழன்றிடும்’னு சொன்னேன்.
பார்த்துக்கலாம்னு சொல்லி என்னை ஆடவச்சார். இசை அமைப்பாளர் அனிருத் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது கம்மிதான். புகழின் உச்சியில இருக்கிற ஒருவர், இந்த வயசுலயே அமைதியை தேடி, அல்லது தன்னைத் தேடி இமயமலை போறார்னா அவர் எப்பேர்பட்ட ஆளுன்னு தெரிஞ்சுக்கலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜோட முதல் படம் ‘மாநகரம்’ நல்லா இருந்துச்சு. மூனு, நாலு வருஷம் கழிச்சு அவரோட ‘கைதி’ படம் நல்லா போச்சு. நான் படம் பார்த்துட்டு, உடனே ஃபோன் பண்ணினேன். மத்தவங்க யாரும் முந்துறதுக்கு முன்னால, நீங்க வாங்கன்னு சொன்னேன். வந்தார். எனக்கு ஏதும் சப்ஜெக்ட் வச்சிருக்கீங்களான்னு கேட்டேன்.
‘உங்களுக்கு இல்லாத சப்ஜெக்டா? வச்சிருக்கேன், சொல்றேன் சார், நான் கமல் ரசிகன்’னு சொன்னார். நான் கேட்டேனா, நீங்க யார் ஃபேன்னு கேட்டேனா? அதாவது பன்ச் லைன் இல்லாம, கொஞ்சம் இன்டலிஜன்டா நடிக்கணும்ங்கறதை மறைமுகமாக அப்படி சொல்றார்ன்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம் கதை சொன்னார். பக்கா வில்லன் கேரக்டர்.
எனக்கு ரொம்ப சந்தோஷம். வில்லன்னா, சிரிச்சுகிட்டே அடிக்கலாம், பேசிக்கிட்டே அடிக்கலாம்னு நிறைய இருக்கு. பிறகு ஒன்பது மாசம் கழிச்சு வந்தார். சார் அதுக்கு நிறைய நடிகர்கள் வேணும், நான் வேற கதை வச்சிருக்கேன்னு சொன்னார். நான் சரின்னு கேட்டேன்.
அதுதான் ‘கூலி’, முதல்ல இதுக்கு ‘தேவா’ன்னு டைட்டில் வச்சிருந்தாங்க. அடுத்தால இதுல ஒரு முக்கியமான கேரக்டர்ல சத்யராஜ் நடிக்கிறார்னு சொன்னார். ‘அவர்கிட்ட கேட்டீங்களா?’ன்னு கேட்டேன். ‘அவர் பண்றேன்னு சொல்லிட்டார், ஆனா ரஜினி சார்கிட்ட கேளுங்க’ன்னு சொன்னார்னு சொன்னாங்க. ‘சிவாஜி படம் பண்ணும்போது, நான் என்ன சம்பளம் வாங்குறேனோ, அதே அளவு கொடுக்கிறேன்னு சொல்லியும் அவர் நடிக்கலை. இதுல அவர் பண்றேன்னு சொல்றதே பெரிய விஷயம்’னு சொன்னேன்.
சத்யராஜுக்கும் எனக்கும் தத்துவரீதியா வேறுபாடு இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில எதுவும் இல்லை. மனசுல இருக்கிறதை வெளிப்படையா பேசிடறவங்களை நம்பலாம். உள்ளே ஒன்னை வச்சுக்கிட்டே வெளிய ஒன்னு பேசறவங்களை நம்பவே முடியாது. இந்த ‘கூலி’ என் மனசுக்கு நெருக்கமான படமா இருக்கு. என் அண்ணனுக்கு என்னை படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. படிப்புத்தான் முக்கியம்னு சொல்லிட்டே இருப்பார்.
அப்பா, ‘இவனை ஏன் படிக்க வைக்கிறே?’ன்னு சொல்வார். அந்த காலத்துல 120 ரூபாய் தேர்வுக்கு கட்டணும். கண்டிப்பா நான் பாஸாகமாட்டேன். அதை ஏன் கட்டணும்னு, அந்த பணத்தை எடுத்து மெட்ராஸ் ஓடி வந்துட்டேன். சினிமாவுல லைட்மேன் வேலையாது கிடைக்குமான்னு பார்த்தேன். கிடைக்கலை. ஓட்டல்ல சர்வர் வேலை கிடைக்குமான்னு பார்த்தேன். கையில இருந்த பணம் காலியானதும் வீட்டுக்கு போனேன். கண்டிப்பா அடி கிடைக்கும்னு நினைச்சா, யாரும் ஒண்ணுமே சொல்லலை.
‘நாளையில இருந்து நீ கூலியா மூட்டை தூக்க போகணும்’னு அப்பா சொல்லிட்டார்னு அண்ணன் சொன்னார். வேற வழியில்ல. சரின்னு போயிட்டேன். அங்க அரிசி மூட்டை இறக்கணும். ஒரு மூட்டை இறக்கினா பத்து பைசா கிடைக்கும். ஒரு நாளு, ‘மூட்டை வந்திருக்கு, ஒரு இடத்துக்கு கொண்டு போகணும்’னு எங்க மாமா சொன்னார்.
சரின்னு போனேன். அதைக் கொடுத்துட்டு, திரும்பும்போது, அந்த வீட்டுக்காரர், 2 ரூபாய் டிப்ஸ் கொடுத்துட்டு, வச்சுக்கோன்னு சொன்னார். இது எங்கயோ கேட்ட குரலாச்சேன்னு பார்த்தா, என் காலேஜ்மெட் மனுசாமி. படிக்கும்போது அவனை ரொம்ப கிண்டல் பண்ணுவேன். அவன் என்னை பார்த்து, ‘என்னா ஆட்டம் ஆடுனடா’ன்னு சொன்னான்.
அப்பதான் வாழ்க்கையில நான் முதன் முதலா அழுதேன். பிறகு சினிமாவுக்கு வந்தேன். பாலசந்தர் சார் பெங்களூர்ல இருந்த இந்த செடியை கொண்டு வந்து தமிழ்நாட்டுல நட்டார். அதுக்கு தண்ணி ஊற்றி செடியா வளர்த்து முத்துராமன் சார், பஞ்சு அருணாச்சலம் சார் கையில கொடுத்தார். அவங்க இன்னும் மரமாக்கினாங்க. இந்த மரம் சாயும்போதெல்லாம் ரசிகர்களாகிய நீங்க தூக்கிப் பிடிச்சிருக்கீங்க. அதுக்காக உங்க காலில் சாஷ்டாங்கமா தலைவச்சு வணங்கறேன்.
அந்த இறைவன் எல்லோரிடமும் பேசுவார். உங்க காதுல மெதுவா, என்ன செய்யணும், என்ன பண்ணணும்னு அவர் குரல் கேட்கும். பிரச்சினை என்னன்னா, அதோடு சேர்ந்து இன்னொரு குரலும் கேட்கும். அது உங்களுடைய குரல். இறைவனுடைய குரல் எது, உங்க குரல் எது என்பதை எப்படி கண்டுபிடிக்கணும்னா, இறைவன் குரல், ‘நீயும் நல்லாருக்கணும்னு, மத்தவங்களும் நல்லாருக்க ணும்னு யோசி, நல்லாருப்பே’ன்னு சொல்லும்.
எவ்வளவு பணம் புகழ், பெயர் வந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லைனா எந்த பிரயோஜனமும் இல்லை. நான் முடிந்தளவு இறைவன் குரல் கேட்டு நடந்து கொண்டிருக்கேன். அதனால நானும் நல்லாருக்கேன், என்னை சார்ந்தவர்களும் நல்லாருக்காங்க. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.படக்குழுவினர் கலந்துகொண்டனர்.