சென்னை: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணையமாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்கக் கூடாது.
அதற்கு யார் காரணம் என்பது உலகத்துக்கே தெரியும். அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். அவருடைய ஆதங்கங்கள் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் டெல்லி தலைமைக்கும் அதுகுறித்து தெரிவித்துள்ளேன். எதிர்காலத்தில் எது வேண்டு மானாலும் நடக்கலாம் என ஓபிஎஸ் பேசியதை, அவர் கோபத்தில் பேசியதாக நான் கருதுகிறேன்.
அவர், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உணர்ந்து தனது சுயமரியாதை முக்கியம் என்று கருதியதால், கோபத்தில் சில வார்த்தைகளை வெளியிடுகிறார். இதற்கு முன் ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர். சாத்தூர் ராமச்சந்திரன், முத்துசாமி, கண்ணப்பன், ரகுபதி, சேகர்பாபு உள்ளிட்ட பலர் திமுகவுக்கு சென்று இருக்கலாம். அவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்தவர்கள்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வர் வாய்ப்பு பெற்றவர். என்னை பொறுத்தவரை அவர் திமுகவில் இணைவது என்ற முடிவை எடுக்க மாட்டார். முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்றதாகத்தான் தெரிவித்துள்ளார். முதல்வரும் அவர் வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரால்தான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அவர் போன்ற அனுபவம்மிக்க தலைவர்களும், பன்னீர்செல்வம் வெளியேறுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பன்னீர்செல்வத்தை மீண்டும் எங்கள் கூட்டணியில் கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் டெல்லி மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரம், பொருளாதாரத்தை தூக்கி எறிந்துவிட்டு என்னோடு நிற்கும் தொண்டர்கள், தேர்தலில் வெற்றி, தோல்விகளை எல்லாம் தாண்டி என்னோடு பயணிக்கிறார்கள். இவர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்பதான் செயல்படுவேன். ஜெயலலிதாவுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல் செய்யக்கூடியவன் அல்ல. இவ்வாறு கூறினார்.