போபால்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள ஜவாசியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷோஹன்லால் ஜெயின் (71), அம்பலால் பிரஜாபதி (51). இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஷோஹன்லால் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் போராடி வந்த நிலையில் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் சாவதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் தனது இறுதி ஊர்வலத்தின்போது எனது உயிர் நண்பர் அம்பலால் பிரஜாபதி நடனமாடி என்னை வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஷோஹன்லாலின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது நண்பர் அம்பலால் இறுதிச் சடங்கில் பங்கேற்று கண்ணீருடன் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து அம்பலால் கூறுகையில், “எனது நண்பருக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். அவரது இறுதி ஊர்வலத்தின்போது நடனம் ஆடுவேன் என்று. அதனை இப்போது நிறைவேற்றியுள்ளேன். நண்பருக்கும் மேலானவர் அவர். ஷோஹன்லால் எனது நிழல் போன்றவர்’’ என்றார்.
‘‘நல்ல நட்புக்கு இதுதான் உதாரணம், இறந்த பிறகும் உண்மையான நட்பு எப்போதும் உயிருடன் இருக்கும் என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது’’ என நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.