புவனேஸ்வர்: ஒடிசாவில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த தாயை சிகிச்சைக்காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் காலதாமதத்தால் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் கந்தர்பால் மாவட்டம் துமேரிபடா கிராமத்தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அந்த கிராமத்துக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாததால், 8 கி.மீ. தொலைவில் உள்ள சாராமுண்டி கிராமத்திலேயே ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது.
இதை அறிந்த பாலமதுவின் மகள் ரஜனி மாஜி, வேறு வழியின்றி தனது தாயை தோளில் சுமந்தபடி கரடுமுரடான பாதையில் 5 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார். பின்னர் இருசக்கர வாகனம் மூலம் 3 கி.மீ. பயணித்து ஆம்புலன்ஸ் வாகனம் இருந்த இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து துமுடிபந்த் சுகாதார மையத்தில் அனுமதித்துள்ளனர்.
நிலைமை மோசமாக இருந்ததால், அங்கிருந்து பலிகுடா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாலமதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு பாலமதுவின் உடலை கட்டிலில் வைத்து சொந்த ஊருக்கு நடந்தபடியே தூக்கிச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் மலை கிராமமான துமேரிபடாவுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதன் காரணமாகத்தான் பாலமதுவை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சாலைவசதி இல்லாததே பாலமது உயிரிழப்புக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினரும் அந்த கிராம மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர். இதே காரணத்தால் ரஜனியின் தந்தையும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.