புதுடெல்லி: “ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும்’’ என்று ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்தது.
இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, என்னை மிரட்டினார்.
வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலோ, மத்திய அரசை எதிர்த்து பேசினாலோ, என் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அருண் ஜெட்லி மிரட்டினார்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘என் தந்தை ராகுலை மிரட்டியதாக கூறுகிறார்.
என் தந்தை அருண் ஜெட்லி கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். ஆனால், வேளாண் சட்டங்கள் 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த உண்மை கூட தெரியாமல், தவறான கருத்துகளை கூறுகிறார் ராகுல் காந்தி. நம்முடன் தற்போது இல்லாதவர்களைப் பற்றி பேசும்போது ராகுல் காந்தி நாகரிகமாக பேசினால் நான் வரவேற்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். ரிஜிஜு கூறும்போது, ‘‘மறைந்த ஜெட்லியின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் மீது ராகுல் காந்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறார்.
அதை கேட்ட பிறகு ஒரு நாள் முழுக்க சிந்தனையாகவே இருந்தேன். ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும் என்று நினைத்தேன். வேளாண் சட்டங்கள் கொண்டு வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே ஜெட்லி மறைந்துவிட்டார்.
அப்படி இருக்கும் போது, ராகுலை ஜெட்லி எப்படி மிரட்டியிருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார். மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி பதவி வகித்தார். அவர் மறைந்த பிறகு நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறுகிறார்.
பொறுப்பற்ற தன்மைக்கு ராகுல் காந்திதான் சிறந்த உதாரணம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தற்போது உயிருடன் இல்லாத ஒருவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது இழிவானது.
இதுபோன்ற பொறுப்பற்ற தலைவரின் பேச்சால், அவரது கட்சியும் நாடும்தான் பாதிக்கும். அவற்றை பற்றி ராகுல் கவலைப்படுவாரா? ஜெட்லி மீது ராகுல் காந்தி கூறிய கருத்துகள் அப்பட்டமான பொய்’’ என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோன்மணி அகாலி தளம் கட்சி எம்.பி. நரேஷ் குஜ்ரால் கூறும்போது, ‘‘பொறுப்பற்ற பேச்சால் தன்னுடைய மதிப்பை தானே கெடுத்துக் கொள்கிறார் ராகுல். இதுபோன்ற பேச்சால் ராகுல் காந்தி தன்னை தரம் தாழ்த்திக் கொள்கிறார்.
ஜெட்லியுடன் 20 ஆண்டுகள் பழகியுள்ளேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினோம். ஆனால், பாஜகவை சேர்ந்த யாரும் மிரட்டவில்லை. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, ‘‘பொது வாழ்க்கையில் அனைத்து தரங்களையும் ராகுல் காந்தி சிதைக்கிறார். நம்முடன் இல்லாத மறைந்த தலைவரைப் பற்றி முதிர்ச்சியின்றி, குழந்தைத்தனமாக பேசுகிறார் ராகுல். வெறுப்புணர்ச்சியுடன் அவர் பேசுவது வெளிப்படையாக தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.