புதுடெல்லி: அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தியர்களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தனர்.
இவர்கள் கடந்த வாரம் மேற்கு வர்ஜினியாவின் மார்ஷல் மாவட்டத்தில் உள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.
ஓஹியோ மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரியவந்தது. அங்கிருந்து அந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த தகவலை மார்ஷல் மாவட்ட அதிகாரி மைக் டவுகெர்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.