சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.
சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பற்பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களைத் தனது உரையில் அதிபர் மேற்கோள் காட்டினார்.
இவ்விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பேசும்போது, ‘‘பண்பாட்டை பேணும் உறைவிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும். எந்த வகையிலான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாத சமூக முன்னேற்றம் தொடர்ந்து நிலவ வேண்டியது மிகவும் அவசியம்.
பல துணை இனக் கலாச்சாரங்கள் உட்பட பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்டும். இதுவே உலகளாவிய இந்திய சமூகத்துக்கு மத்தியில் சிங்கப்பூர் தமிழர்களையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் தனித்துவமிக்கவர்களாகத் திகழச் செய்யும்’’ என்றார்.
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின் நூல், நாட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவான முதல் கலைக்களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
இதன் அங்கமாக, தமிழ்ச் சமூகத்தின் கதைகள், வரலாற்றைத் தலைமுறை கடந்தும் கடத்தும் நோக்கில் ஏறத்தாழ 375 பகுதிகளில் பல்வேறு தகவல்களை விவரிக்கும் துல்லியமான பதிவுகள் தகுந்த ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் தேசிய நூலக வாரியத்தின் மின்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
கலைக்களஞ்சியத்தை இணையவெளியில் படிப்பதற்கான வழிமுறை, இருமொழிகளிலும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்நுட்பம், வாழும் கலைக்களஞ்சியத்தில் புதிய தலைப்புகளை இணைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் தொகுப்பின் துணை ஆசிரியர்கள் அழகிய பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன் ஆகிய இருவரும் விளக்கினர்.
விழாவில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான அருண் மகிழ்நன் பேசும்போது, ‘‘இந்த மின் நூல் மக்களைப் பற்றி மக்களால் உருவாக்கப்பட்ட தேர். இந்த அருஞ்செல்வம் உருப்பெற உதவி புரிந்தோருக்கு நன்றி. இதனை வாழும் களஞ்சியமாக நிலைக்கச் செய்ய, சமூகத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
தேசிய நூலக வாரிய தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநருமான அழகிய பாண்டியன் மேலும் கூறும்போது, ‘‘இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான மூன்று ஆண்டுப் பயணம் சுவாரசியமானது. எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு கருவூலத்தை உருவாக்குவதில் பங்காற்ற கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். தேசிய நூலக வாரியம் இருக்கும் வரை சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் வாழும்’’ என்றார்.
இவ்விழாவில் அதிபர் தர்மனின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள மற்றும் கலாச்சார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பங்காளித்துவ அமைப்பினர், தொண்டூழியர்கள் உட்பட சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.