ஈரோடு: எனக்கு கடிதம் எழுதியதற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதாரம் இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், ஆடிப்பெருக்கையொட்டி நடந்த ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துஉள்ளது. தேர்தல் நெருங்குவதால்தற்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக கூறுகின்றனர்.
திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. நாமக்கல் மாவட்டம் கிட்னி விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் திமுக எம்.பி. எம்எல்ஏ இடையே ஏற்பட்டுள்ள மோதல், அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. திமுகவில் மட்டுமல்லாது, இண்டியா கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை.
தேர்தலின்போது யாருக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கப்படும் என்பதைவிட, திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை. எனக்கு கடிதம் எழுதியதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவ்வாறு ஆதாரம் இருந்தால் ஓபிஎஸ் அதை என்னிடம் காண்பிக்கட்டும்.
நான் பன்னீர்செல்வத்தை குறை கூற மாட்டேன். அவர் முதல்வரை சந்திப்பதற்கு முதல் நாள்கூட செல்போனில் தொடர்பு கொண்டேன். அவர் கூப்பிட்ட போதெல்லாம், நான் பேசியுள்ளேன். தற்போது இத்தகைய குற்றச்சாட்டை அவர் தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை? முதல்வரை எளிதாக சந்திக்க முடியாது என்பதால், போதுமான முன்னேற்பாடுகள் செய்த பின்னரே பன்னீர்செல்வம், முதல்வரை சந்தித்துள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.