சேலம்: மேட்டூர் அருகே மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை ஸ்கூபா டைவிங் மூலம் 22 மணி போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சேலம் அடுத்த தாதகாப்பட்டி குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (20). இவர் சோலார் பேனல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 நண்பர்களுடன் சேர்ந்து மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் நேற்று குளித்துள்ளார். அப்போது, கார்த்திக் திடீரென நீரில் மூழ்கிய நிலையில், அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது நண்பர்கள் மேச்சேரி காவல் நிலையம் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கார்த்திக் உடலை தேடி வந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால் உடலை தேடும் பணியை நிறுத்தினர். தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் நங்கவள்ளி, ஓமலூர், மேட்டூர் அனல் மின் நிலையத்தை சேர்ந்த 40 பேர் அடங்கிய குழுவினர் இன்று காலை மீண்டும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, உபரிநீர் திட்டத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது. உடல் கிடைக்காத நிலையில், தருமபுரி மாவட்டம் ஒக்கேனக்கல் மற்றும் சென்னை மெரினாவில் இருந்து தலா 3 பேர் அடங்கிய 2 சிறப்பு குழுவினரை வரவழைத்தனர். ஒக்கேனக்கலில் இருந்து வந்த குழுவினர் ஆக்சிஜன் பொருத்திய சிலிண்டரை பயன்படுத்தி ஸ்கூபா டைவிங் மூலம் 25 அடி ஆழத்தில் புதரில் இருந்த இளைஞர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 22 மணி போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.
இளைஞர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், ஆடி பெருக்கு நாளான இன்று எம்.காளிப்பட்டி ஏரியில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தடை விதித்தனர். இதுதொடர்பாக மேச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி நம்மிடம் கூறியதாவது, “நீர்நிலைகளில் ஆழமான மற்றும் ஆபத்தான பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதையும், நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, விடுமுறை நாட்களில் நீர்நிலைகளுக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.