71-வது தேசிய திரைப்பட விருதுகள் வென்ற திரைக் கலைஞர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங் – தமிழ் திரைப்படம்), சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி – தமிழ் திரைப்படத்துக்கான பாடல்கள்), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங் – தமிழ் திரைப்படம்), சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டவுடன் திரையுலக பிரபலங்கள் பலரும் விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து.
திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும். வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக” என்று தெரிவித்துள்ளார்.