ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது. ரஜினியின் 171-வது படமான இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
இந்தி நடிகர் ஆமிர் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாகும் இப்படத்துக்கு, அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘கூலி’ படத்தின் 3 நிமிட ட்ரெய்லரில் முதல் ஒரு நிமிடத்துக்கு துணைக் கதாபாத்திரங்கள், கதைக்கள அறிமுக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துறைமுகம், கூலித் தொழிலாளிகள், கேங்க்ஸ்டர், துணைக் கதாபாத்திரங்களின் பதற்றங்கள், ரஜினி பில்டப் என நகர்கிறது ட்ரெய்லர்.
ஒரு நிமிடத்துக்குப் பின் ‘கூலி’ ரஜினி இன்ட்ரோவின்போது ஒலிக்கத் தொடங்குகிறது அனிருத்தின் ‘அரங்கம் அதிர’ பாடல் வரிகள். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சவுபின் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த காட்சிகளில் அணிவகுக்க, டாட்டூஸ் மயமான ஆமிர் கானின் ஆக்ஷன் தெறிப்புகள் ஆர்வத்தை தூண்டுகின்றன. நாகர்ஜுனா, உபேந்திரா கதாபத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.
லோகேஷின் நாயகர்களுக்கே உரிய அமைதியான அப்ரோச் தொடங்கி ஆவேச அதிர்வுகள் வரையில் ‘தேவா’ என்ற கதாபாத்திர பெயரில் கச்சிதமாக வலம் வருகிறார் ரஜினிகாந்த். முழுக்க முழுக்க ஆக்ஷன் மலிந்த ட்ரெய்லர் முழுக்கவே ‘கைதி’, ‘விக்ரம்’ படங்களின் இருள் சூழ்ந்த கலர் டோன் விரவிக்கிடக்கிறது. துறைமுகமும் துறைமுகம் சார்ந்த இருட்டுப் பக்கங்களையும் புரட்டும் ‘கூலி’ மீது எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையிலேயே ட்ரெய்லர் இருக்கிறது.