Last Updated : 02 Aug, 2025 02:55 PM
Published : 02 Aug 2025 02:55 PM
Last Updated : 02 Aug 2025 02:55 PM

லண்டன்: இங்கிலாந்து அணி உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளின் கடந்த கால செயல்பாடு குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் மூன்று நாட்கள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது. இந்த சூழலில் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பார்ப்போம்.
ஓவல் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் வெளிநாட்டு அணிகளின் செயல்பாடு எப்படி?
- கடந்த 1971-ல் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4 விக்கெட்டுகளில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா.
- 2024-ல் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் 8 விக்கெட்டுகளில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை.
- 1963-ல் முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீழ்த்தியது.
- 1882-ல் முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 ரன்களில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
- கடந்த 2021-ல் முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்தை 157 ரன்களில் வீழ்த்தியது கோலி தலைமையிலான இந்திய அணி.
ஓவல் மைதானத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு!
- 1902-ல் 263 ரன்கள் இலக்கை ஆஸி.க்கு எதிராக இங்கிலாந்து எட்டி இருந்தது.
- 1963-ல் இங்கிலாந்து உடனான ஆட்டத்தில் 253 ரன்களை சேஸ் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
- 1972-ல் 242 ரன்களை விரட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
- 2024-ல் 219 ரன்கள் இலக்கை எட்டியது இலங்கை அணி.
- 1994-ல் 204 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விரட்டியது இங்கிலாந்து.
- 2008-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 197 ரன்களை எட்டி இருந்தது இங்கிலாந்து.
- 1971-ல் 173 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு எதிராக விரட்டி இருந்தது இந்தியா.
ஓவல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற எவ்வளவு ரன்கள் தேவை: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை வைத்து பார்க்கும் போது இந்தப் போட்டியிலும் தரமான த்ரில்லிங் சேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தற்போது லண்டனில் நிலவும் மழை மேகங்கள் சூழ்ந்த வானிலை சூழலை வைத்து பார்க்கும்போது 200+ ரன்களை சேஸ் செய்வது இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கும். அதேபோல இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் மொத்தம் 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதை இரண்டு அணிகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளும்.
FOLLOW US
தவறவிடாதீர்!