லண்டன்: இங்கிலாந்து உடனான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தன. இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியை 224 ரன்களில் ஆல் அவுட் செய்த பிறகு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். 12.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸாக் கிராவ்லி 57 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டக்கெட்டை ஆகாஷ் தீப் மற்றும் கிராவ்லியை பிரசித் கிருஷ்ணாவும் வீழ்த்தினர்.
சிராஜ் அபாரம்: முக்கிய கட்டத்தில் இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் சிராஜ் துல்லியமாக பந்து வீசி இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேப்டன் ஆலி போப், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தல் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியாக ஹாரி புரூக் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தினார். காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் கிறிஸ் வோக்ஸ் பேட் செய்ய வரவில்லை. இதனால் 247 ரன்களில் இங்கிலாந்து ஆட்டமிழந்தது.
இந்தியா 2-வது இன்னிங்ஸ்: தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ராகுல் 7 மற்றும் சாய் சுதர்ஷன் 11 ரன்களிலும் வெளியேறினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 59 ரன்கள் எடுத்துள்ளார். ஆகாஷ் தீப் 4 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.