பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 வீடுகள், 4 வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 4 வாகனங்களும் சிக்கின.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராக பணியாற்றிய காளகப்பா நிதகுன்ட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. அவர் தற்காலிக ஊழியராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெற்றுவந்த நிலையில், முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதாக ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று கொப்பலில் உள்ள அவரது வீடு, அலுவலகம், அவரது சகோதரர் ஜெகன் குன்ட்டியின் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையில் 30 போலீஸார் ஈடுபட்டனர்.
அப்போது காளகப்பா வீட்டில் கணக்கில் வராத 24 வீடுகளின் ஆவணங்கள், 4 காலி வீட்டு மனைகளின் ஆவணங்கள், 40.8 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆவணம் ஆகியவை சிக்கின. இந்த சொத்துகள் காளகப்பா, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து ரகசிய பீரோவில் சோதனை நடத்தியதில் ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் சிக்கின. மேலும் 16 விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், 2 கார்கள், 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து 96 முழுமையடையாத திட்டங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து ரூ.72 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக ஆதாரங்கள் சிக்கின. தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய முன்னாள் எழுத்தரின் வீட்டில் சிக்கிய பொருட்களை கண்டு, அதிகாரிகள் வியப்படைந்தனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில், ‘‘காளகப்பா நிதகுன்ட்டி மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சொத்துகளின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது? அவருடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.