ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தீர்த்தங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஆன்மிக வழிபாட்டு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
சாஸ்திர மரபின்படி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்வதும் மிகவும் முக்கியமானவை ஆகும். அதேபோல, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையின் மணலையும், பிரயாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடுவதும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாஸ்திர மரபுகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு, அதாவது காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்யவும், ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்யவும் ஆன்மிக வழிபாட்டு ஒப்பந்தம் தேவகோட்டை சமஸ்தானம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடி தீர்த்த நீருடன் தேவகோட்டை சமஸ்தான நிர்வாகிகள்.
இதற்காக, கடந்த ஜுலை 28-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலில் திரிவேணி சங்கம தீர்த்தம் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்த்த நீரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேவகோட்டை சமஸ்தான குடும்பத்தைச் சேர்ந்த சி.ஆர்.எம். அருணாசலம் மற்றும் கோவிலூர் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கினார்.
தொடர்ந்து, ராமேசுவரம் கோயிலில் ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு கோடி தீர்த்த நீரால் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, இந்த தீர்த்த நீர் தேவகோட்டை சமஸ்தான குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தேவகோட்டை சமஸ்தான குடும்பத்தைச் சேர்ந்த சி.ஆர்.எம். அருணாசலம் கூறும்போது, “ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தேவகோட்டை சமஸ்தானம் மூலம் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்யவும், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்யவும் தேவகோட்டை சமஸ்தானம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவின் காசி-ராமேசுவரத்தை ஆன்மிக ஒருமைப்பாடு மற்றும் தேசப்பற்றின் அடிப்படையில் இணைக்கும் புதிய முயற்சியாகும்” என்றார்.